ஊரடங்கு நீட்டிப்பு.. ஆனால் வேறு மாதிரி இருக்கும்.. முதல்வர்களுடனான மீட்டிங்கில் மோடி கூறியது என்ன?
டெல்லி: நாட்டில் ஊரடங்கு நிலையே தொடர வேண்டுமா என்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதில் முக்கியமாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 9 மாநில முதல்வர்கள் மட்டுமே பேசுவதற்கு இதில் அனுமதிக்கப்பட்டிருந்தது. மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை சமர்ப்பித்தனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது முழுமையாக தட்டை என்ற நிலைக்கு மாறவில்லை என்பதை அனைத்து மாநில முதல்வர்களும் ஒப்புக்கொண்டனர்.
முதல்வர்கள்
இன்னமும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு தேவை இருக்கிறது. ஊரடங்கு தளர்வு என்பது அமலாக்கப்பட்டால் பாதிப்பு தொடரக் கூடும் அல்லது அதிகரிக்கக்கூடும் என்று பல முதல்வர்கள் கவலை தெரிவித்தனர். அதே நேரம் இப்படியே ஊரடங்கு நிலைமை தொடர்ந்தால் வேலைவாய்ப்பு வருமானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்வார்கள். பசியால் மக்கள் வாடக்கூடிய நிலைமை வரும் என்றும் சில மாநில முதல்வர்கள் எச்சரிக்கை விடுக்க தவறவில்லை.
அமித் ஷா
இவை அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார் பிரதமர் மோடி. அவருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உயர் அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முதல்வர்கள் கருத்துக்களை பரிசீலனை செய்தனர். அப்போது முதல்வர்களிடம், பிரதமர் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதுபற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பசுமை மண்டலம்
முதல்வர்களின் ஆதங்கத்தை ஏற்றுக் கொண்ட மோடி, சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை தொடரலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார். அதாவது பசுமை மண்டலம், என்று அழைக்க கூடிய, ஒரு கொரோனா நோய் பாதிப்பு கூட இல்லாத பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை தளர்த்தி, அந்த மாவட்டத்திற்குள் மட்டும் போக்குவரத்தை அனுமதிக்கலாம். மற்ற இடங்களில் ஊரடங்கு உத்தரவை தொடரலாம் என்று மோடி கூறியுள்ளார்.
ஒரு பெரிய நகரத்தின் சில பகுதிகள் சிவப்பு மண்டலத்தில் இருந்தால், நகரத்தின் பிற பகுதிகளுக்கும், வைரஸ் பரவாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். நீங்கள் கள நிலவரத்தை நன்கு அறிந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் நிலைமையை சிறப்பாக மதிப்பிடலாம் என்றும் முதல்வர்களிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மே 3ம் தேதி
ஏற்கனவே, மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வெளியிட்ட அறிக்கையில், கிராமப்புற பகுதிகளில் முடி திருத்தும் கடைகள் உள்ளிட்ட மிகவும் அத்தியாவசியம் இல்லாத கடைகளையும் திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதே பாணியில்தான் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு என்பது மே மாதம் 3ம் தேதிக்கு பிறகும் தொடரும் என்று தெரிகிறது.
டிவி சேனல்
மே மாதம் 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு நிறைவடையும் நிலையில், அப்போது மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றுவார் மோடி. சிவப்பு மண்டலம் பகுதிகளில் ஊரடங்கு தொடரும் என்றும், பச்சை மண்டலம் பகுதிகளில் ஊரடங்கு தளர்வு இருக்கும் என்று அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது என்று இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர்களின் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.